விஷ்ணுபுரம் இலக்கிய விழா – சில வார்த்தைகள் – பகுதி 1

ஓரளவு தொடர்ச்சியான இலக்கிய வாசிப்பும் அதைச் சார்ந்த தேடலும் வந்தபோதே விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு குறித்த அறிமுகம் கிடைத்தது. அப்போதுதான் ஜெயமோகனை வாசிக்கத் தொடங்கி இருந்ததால், என்ன நடக்கிறது என்று அமைதியாக பார்த்துகொண்டிருந்தேன். சமீபத்திய  மூன்றாண்டுகளாகவே இந்த நிகழ்வுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு. கூடவே ஒரு தயக்கமும். இவ்வளவு நேர்த்தியான, தேர்ச்சிபெற்ற வாசிப்பை உடைய ஒரு கூட்டத்திற்கு செல்லுமளவுக்கு நாம் வாசித்திருக்கிறோமா என்ற ஒரு கேள்வி எப்போதும் என்னில் இருந்தது. இப்போதும் உண்டு. ஆனால், கடந்த ஆண்டு இரண்டு மூன்று முறை நிகழ்ந்த ஜெ. உடனான நேரடி சந்திப்புகள் ஒரு நம்பிக்கையை வளர்த்திருந்தது. அதுவே, இந்தாண்டு விஷ்ணுபுரம் செல்வதற்கான உத்வேகத்தை அளித்தது என்று கூட சொல்லலாம்.

டிசம்பர் 24 இரவு பதினொரு மணிக்கு ரயில். நாகர்கோவில் – கோவை விரைவு வண்டி. அதற்கு விஷ்ணுபுரம் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டிக்கொண்டேன். நண்பர்கள் அழிசி ஸ்ரீனிவாசன், சுந்தர் மற்றும் இசக்கிராஜா திருநெல்வேலி ரயில்நிலையத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பெட்டிகளில் படுக்கை. கோயம்புத்தூரில் சந்திப்போம் என்று விடைபெற்று, அவரவர் பெட்டியில் ஏறிகொண்டோம். இரவு மோசமில்லாத உறக்கம். இரவு நேர ரயிலில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், ரயிலேறி கண்கள் மூடி உறங்கி விழித்தால் நமக்கு அறிமுகமே இல்லாத வேறொரு நிலத்தில் போய் காலையில் இறங்கிவிடலாம். ஒரு குகை பயணம் போல. ரயிலே குகையாய் நகர்வதைப் போல. நாம் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு பெரிய மாய கை ஒன்று நம்மை அப்படியே தூக்கி வேறொரு இடத்தில் போட்டுவிடுவதைப் போல. சமீபத்திய பயணங்கள் மூலம் நான் கற்றுகொண்டது, லக்கேஜ் சுமந்து செல்வதைக் கூடுமானவரைக் குறைத்துகொள்வது மிக நல்லது. அதிகம் சுமையில்லை. இருந்தாலும் கோவை குளிருக்கு பயந்து எடுத்து சென்றிருந்த ஜெர்கினின் கனம் அழுத்தியது. ரயிலில் நன்றாக குளிர் தாங்கியதால் அதற்கு பாவமன்னிப்பு அளித்து தோளில் தங்கம் போல் தாங்கிக் கொண்டேன்.

கோவையில் இறங்கியதும் ஒரு ஆட்டோ பிடித்து நேரே நிகழ்வு நடக்குமிடத்திற்கு –  ராஜஸ்தான் சத் சங்கம் – சென்று சேர்ந்தோம். அரங்கின் வாசல் பரபரவென்று இருந்தது. வாசக , எழுத்தாள நண்பர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான வழிகாட்டலை விஷ்ணுபுரம் நண்பர்கள் செய்துகொண்டிருந்தனர். ஏற்கெனவே சிலபல உரையாடல்கள் தொடங்கி நடந்துகொண்டிருந்தன. ஸ்ரீனிவாசனுக்கு அரங்கின் வளாகத்திலேயே அறை ஒதுக்கப்பட்டிருந்தது. எனக்கு கொஞ்சம் தள்ளி, நடந்து செல்லும் தொலைவில். ஒரு பெரிய வீடு (டாக்டர் பங்களா). அதில் நிறைய அறைகள். ஒரு அறைக்கு இரண்டு நபர்கள் வீதம் ஏற்பாடு. என்னுடைய அறையில் யாருமில்லை, நான் மட்டும்தான். கட்டில் மெத்தைகளுடன் அமைந்த டீசண்ட்டான அறை. முகம் சுளிக்காமல் கழிக்க ஏதுவான கழிவறை.

குளித்து கிளம்பி 9 மணி அளவில் மீண்டும் அரங்கிற்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் அரங்குக்கு வெளியே கூட்டம் கூட்டமாக நின்று பேசத்தொடங்கி இருந்தனர் மக்கள். சரியாக நான் உள்ளே செல்லவும் கவிஞர் லக்‌ஷ்மி மணிவண்ணன் எதிர்பட்டார். அவரிடம் ஏற்கெனவே அறிமுகம் உண்டென்பதால் பேசிக்கொண்டிருந்தேன், அதற்குள் இன்னும் நான்கு நண்பர்களும் சேர்ந்துகொண்டனர். சென்னையில் எழுத்தாளர்கள் வாழும் அறை, நாகர்கோவில் நிழற்தாங்கல்,சுந்தர ராமசாமி என்று சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார். அதற்குள் பசியில் வயிற்றுக்குள் லாரி உறுமியது. நண்பர் மதார் ஏற்கெனவே வந்திருந்தார். மிக அற்புதமான நிறைவான காலை உணவு. ஒப்பேற்றல்கள் இல்லை. ஒரு உயர்தர உணவகத்தில் இருக்கும் தரமும் சுவையும் அப்படியே இருந்தது.

அரங்கினுள் இடம்பிடிக்க போட்டா போட்டி நடந்துக்கொண்டிருந்தது. மிக வேகமாக அரங்கம் நிரம்பியது. மாடிப்படி ஏறி நிமிர்ந்து பார்த்தால், அண்ணன் ஜீவகரிகாலன் ஜம்மென்று ஸ்டாலில் அமர்ந்திருந்தார். ஆஹா.. என்ன இருந்தாலும் தெரிந்த, அறிந்த, பழகிய முகம் பார்த்தவுடன் வரும் ஒரு பாதுகாப்புணர்வை விவரிக்க இயலவில்லை. அங்கு அரங்கில் பார்த்துகொண்டதில், அவருக்கு நானும் எனக்கு அவரும் ஓர் இனிய அதிர்ச்சி தான். சிறிது நேரம் ஸ்டாலில் அமர்ந்து வந்திருந்த புதிய புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.

மிகச்சரியாக, ஏற்கெனவே அறிவித்திருந்ததுபோல் காலை மணி 10.01-க்கு முதல் அமர்வு தொடங்கியது. முதல் அமர்வுக்கான விருந்தினர் தமிழினி இணைய இதழாசிரியர் கோகுல் பிரசாத் மேடையில் அமர வைக்கப்பட்டார். ஒவ்வொரு அமர்வும் ஒரு மணிநேரம். வாசகர்கள் கேள்விகள் கேட்கலாம். ஒருங்கிண்ணைப்பாளர் ஒருவரும் மேடையில் உண்டு. முதல் நாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கிய அமர்வு, அன்று இரவு 9 மணிக்கு சோ.தருமன் அமர்வுடன் நிறைவடைந்தது. எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவெனில் காலை முதல் அமர்வில் என்ன கூட்டம் இருந்ததோ அதே கூட்டம் இரவு 9 மணி வரை இருந்தது. ஆச்சரியம் தாளாமல் கடைசி இருக்கையில் அமர்ந்து மொத்த அரங்கும் அடங்கும் வண்ணம் ஒரு புகைப்படம் எடுத்துகொண்டேன். சுமார், 5 ஆண்டுகளாக பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு வருகிறேன், எனக்கு தெரிந்தவரையில் இவ்வளவு கனகச்சித்தமாக நடத்தப்பட்ட ஒரு நிகழ்வை நான் பார்த்ததில்லை.  இதேப்போல் தான் ஒவ்வொரு அமர்வும். நேர நிர்வாகத்தில் எந்தவித சலுகைகளும் கிடையாது. ஜெயமோகனே கேள்வி கேட்க எழுந்தார் என்றாலும் (ஆனால் அவர் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை) ஒரு மணிநேரம் கடந்துவிட்டதென்றால் “நேரம் முடிந்துவிட்டது சார். பிறகு தனியாக பேசிக்கொள்ளுங்கள்” என்று மட்டுறுத்தி அமர்வை முடித்துவிடுகிறார்கள். காளி ப்ரஸாத், சுஷில் குமார், செந்தில் ஜெகன்னாதன், ஜா.தீபா, திருச்செந்தாழை போன்ற இளம் படைப்பாளிகள் கேள்விகளை எதிர்கொண்ட விதமும் பதிலளித்த விதமும் பாராட்டுக்குரியது. வாசகர்கள் சார்பில் பலதரப்பட்ட கேள்விகள் முகிழ்த்தெழுந்தன; மிக கூர்மையான வாசிப்போடும் கேள்விகளோடும் பரீட்சைக்கு தயாராகும் மாணவர் போல வாசகர்கள் வந்திருந்தனர். சோ.தருமன், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரது அமர்வுகளும் கலகலப்பாக நிகழ்ந்தேறியது. நடந்த அத்தனை அமர்வுகளிலும் எழுத்தாளர்களுக்கு போர்த்தப்பட்ட சால்வைகளை உடனேயே அழகாக மடித்து நாற்காலியில் வைத்துகொண்ட ஒரே எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் தான். அவருடைய 30 ஆண்டுகால இலக்கியச் செயல்பாடுகளை முன்வைத்து நடந்தத அமர்வில் அதே அளவு நேர்த்தியாகவும் பொறுமையாகவும் பதிலளித்தார். இந்த அமர்வுகளின் அதிமுக்கிய நோக்கம் வாசகர்கள் அந்த எழுத்தாளர்களின் எழுத்தை முழுவதுமாக படித்து புரிந்துகொண்டு கேள்விகள் எழுப்பி இன்னும் தெளிவாவது தான் என்றாலும், பங்குபெற்ற எழுத்தாளர்களுக்கே இந்தக் கேள்விகளும் உரையாடல்களும் இன்னும் பல்வேறு திறப்புகளை அளிக்கும் என்று நினைக்கிறேன். காரசாரமாக, சரமாரி கேள்விகளுடனும் தெளிவான பதில்களோடும் அமைந்த ஜா.தீபா-வின் அமர்வு முடிந்து வெளியே பேசிக்கொண்டிருக்கையில் அண்ணன் ஒருவர் சொன்னார், “வரும் வருடம் இன்னும் காத்திரமான கேள்விகளுடனும் அனுபவங்களுடனும் (ஜா.தீபா) அவரிடமிருந்து படைப்புகள் நிச்சயம் வெளிவரும்”.

இதற்கிடையில் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால், போகன் சங்கர், சுநீல் கிருஷ்ணன், கார்த்திகைபாண்டியன், திருச்செந்தாழை என்று பலரைச் சந்தித்து பேசினேன். சாகித்ய அகாடெமி வெளியீடாக மறுபதிப்பு கண்டிருக்கும் ‘ஜீவன் லீலா’ புத்தகத்தை அழிசி ஸ்ரீனிவாசன் அவருடைய நண்பர் மூலமாக சென்னையில் இருந்து வரவழைத்து இருந்தார். அதில் எனக்கு ஒரு பிரதி வாங்கிக்கொண்டு நேரே நாஞ்சில் நாடனிடம் சென்று காட்டினேன்; அவருக்கு மிக்க மகிழ்ச்சி. “ப்ரிண்ட்ல இல்லாம இருந்துச்சே, எப்படி வாங்குனீங்க?” என்றார். இதுமாதிரி என்று விவரம் சொன்னவுடன், “நல்ல விசயம். நானும் ஒண்ணு வாங்கிக்கிறேன். என்கிட்ட இருக்கு, இருந்தாலும் வர்ற நண்பர்களுக்கு குடுக்கலாம்ல” என்றார். உள்ளத்தில் நல்ல உள்ளம்! பின்னரே தெரிந்துகொண்டேன், ஜீவன் லீலா புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்த 63 நபர்களில் 60 பேருக்கு அவராலேயே அந்தப் புத்தகம் அறிமுகமாகி இருக்கிறது!

பிறகு, அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழில் நம்மை அலைக்கழித்த ‘பிறங்கு’ என்ற வார்த்தை குறித்து கேட்டேன். கேட்டது தான் தாமதம், சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பேப்பரை எடுத்து பிறங்கு என்று சத்தமாக சொல்லிக்கொண்டே எழுதி வைத்துக்கொண்டார். “கம்பன் இந்த வார்த்தையை அநேக இடங்களில் பயன்படுத்தி இருக்கிறான்; இருந்தாலும் இந்தப் பாட்டுல என்ன அர்த்தம் வருதுன்னு பாத்துருவோம்”. தொடர்ந்து ஆற்றொழுக்காக – தேரார் வீதி வலங்காட்டேன் என்று காந்திமதியம்மை பிள்ளைத்தமிழை மனப்பாடமாய் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.  அந்தப் பேப்பரில் நான் கேட்ட பிறங்கு என்ற வார்த்தை எட்டாவதாக அமைந்திருந்தது; அதன் மேலே இருந்த ஏழு வார்த்தைகளும் இதேபோல் யார் யாரோ கேட்டு அர்த்தம் கண்டுபிடிக்க குறித்து வைத்திருக்கிறார். ஆக, குறைந்தது பத்து வார்த்தை – வார்த்தைக்கு ஒரு கட்டுரை – ஒரு கட்டுரைக்கு ஐந்து பக்கம் வைத்தாலும் – 50 பக்கங்களில் 10 தலைப்பில் கட்டுரை தயாராக ஆரம்பித்திருக்கும் இந்நேரம். வரும் வாரங்களில் இதழ்களில் எதிர்நோக்கலாம்; எப்படிப் பார்த்தாலும் நமக்கு வேட்டை தான்!

மதியம், தமிழில் கவிதையும் அழகும் ஒருசேர திரண்டெழுந்து நிற்கும்  கவிஞர் இசை-க்கு அருகில் அமர்ந்து உணவருந்த வாய்த்தது என் நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். அவரிடம் கேட்க வேண்டாம், ஏதும் சபிக்கக்கூடும். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே மறுப்பக்கம் ஆசான் வந்து அமர்ந்தார்! பிறகென்ன அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள், இரண்டாவது ரவுண்ட் கேரட் அல்வாவுக்காக சப்ளையரைத் தேடிக்கொண்டிருந்தேன் நான்.

அண்ணன் செந்தில் ஜெகன்னாதனுடன் சில மணிநேரங்கள் செலவளிக்க வாய்த்தது. எழுத்து சார்ந்தும், இலக்கியச்சூழல் சார்ந்தும் கொஞ்சம் பேசிக்கொண்டோம். இரவுணவு முடித்து 11 மணியளவில் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தேன், மறுநாள் வழக்கம்போல் 5.55-க்கு முழிப்பு தட்டிவிட்டது.

முதல் நாள் – நிறைவு.

One thought on “விஷ்ணுபுரம் இலக்கிய விழா – சில வார்த்தைகள் – பகுதி 1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s