விஷ்ணுபுரம் இலக்கிய விழா – சில வார்த்தைகள் – பகுதி 2

நிறைவான உறக்கம். காலையில் வழக்கம்போல் 6 மணிக்கெல்லாம் விழிப்பு தட்டியது. சிறிய நடை சென்று வரலாம் என்று கிளம்பினேன். அறையில் தனித்தே இருந்ததால் உடன் வர வேறு நண்பர்கள் இல்லை. பங்களாவில் இருந்த வேறு யாரையும் காணவும் இல்லை. வாசலில் நின்ற காவலாளியை டீக்குடிக்க அழைத்தேன், “இல்லைங்ணா நீங்க சாப்ட்டு வாங்கண்ணா” என்றவருக்கு சுமார் 49 வயது இருக்கும்!

பன்னும் டீயும் சாப்பிட்டே உயிர் வாழும் கோவை வாழ் மக்கள் என்றொரு வழக்கு கேள்வியுற்றிருக்கிறேன். அதற்கேற்றார்போல் நகரெங்கும் பேக்கரிகள் தான். ஆச்சரியமாக பெரும்பாலான பேக்கரிகளில் டீ நல்ல சுவையாகவே இருந்தது. கோவை என்றவுடனேயே வீட்டில் அனைவரும் குளிர் பயம் காட்டினார்கள். ஆனால், நிகழ்வு நடந்த ஆர்.எஸ் புரம் பகுதியில் அவ்வளவாக குளிர் தெரியவில்லை. அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்திருந்த கான்கிரீட் கட்டிடங்கள் குளிரைக் குறைத்திருக்கக் கூடும். புறநகரில் பயங்கர குளிர் என்று நண்பர்கள் அங்கலாய்த்தார்கள். டீ முடியும் முன் அண்ணன் அகரமுதல்வன் போனில் அழைத்தார். சென்னையிலிருந்து நண்பர் ஒருவருடன் காரில் வருகிறார். நேரே ஜீவ கரிகாலனின் அறைக்கு சென்று தயாராகி அரங்குக்கு வந்துவிடுவதாக சொல்லிவிட்டார். அறைக்கு வந்து குளித்துத் தயாராகி உடைமைகளை எடுத்துகொண்டு அரங்கிற்கு கிளம்பிவிட்டேன். அரங்கு இன்னும் புத்தெளிர்ச்சி பெற்று ஒளிர்ந்தது. நேற்றிருந்தைவிட விழாக்களை உச்சமாய் தெரிந்தது. நேரே யாவரும் ஸ்டால் சென்று ஜீவா அண்ணன் வரும்வரை ‘வியாபாரம்’ பார்த்துகொண்டேன். சில நல் அறிமுகங்கள் கிடைத்தது. பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டார் எழுத்தாளர் கலைச்செல்வி. புத்தகம் வாங்க வந்த நண்பர் ஒருவரிடம் பேச்சுகொடுக்க, அவர் திருநெல்வேலி சித்தா கல்லூரி முன்னாள் மாணவர் என்று தெரிந்ததும் இன்னும் நெருக்கமானோம். பிறகு, சுநீல் கிருஷ்ணனின் கதைகள் வாசித்ததில்லை என்று என்னை பரிந்துரைக்க கேட்டார், அம்புப் படுக்கையை பரிந்துரைத்து இன்னொரு புத்தகமும் வாங்க செய்தேன். ஆஹா.. நமக்குள்ளயும் ஒரு சேல்ஸ்மேன் உருவாகிறான்!

May be an image of 1 person
விக்கி அண்ணாச்சி

அண்ணன் இளங்கோவன் முத்தையா, சரவணன் சந்திரன், கோவை வாழ் கார்த்திக் அண்ணன் ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தேன். இந்தக் களேபரத்தில் இயக்குனர் வஸந்த் சாய் அமர்வு தவறிவிட்டது. கவிஞர் சின்ன வீரபத்ருடு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று தெரிந்தவுடன் என்னுடைய ஆர்வம் இன்னும் அதிகமாகியது. அவருடைய அமர்வில் தெலுங்கு கவிதைகள் குறித்த ஒரு சித்திரம் கிடைத்தது. அதன்பின், விக்கி அண்ணாச்சி அமர்வு. அடேயப்பா..! என்னவொரு கம்பீரம். பெருமிதம். அதே நேரத்தில் கண்களை இடுக்கிக்கொண்டு சிறு குழந்தையின் கள்ளமில்லா சிறப்பு. “நான் தாமிரபரணி” என்று அவர் சொன்னவுடன் எனக்குள்ளிருந்த திருநெல்வேலிக்காரன் தன்னையறியாமல் கைத்தட்ட தொடங்கிவிட்டான். மாலை அவரைத் தனியாக சந்திக்கும்போது “எனக்கும் திருநெல்வேலி தான்” என்றதும் கைகளைப் பிடித்துகொண்டார். தாமிரபரணியின் குளிர்ச்சி. எழுத்தாளர் கலாப்ரியா எழுதிய நினைவின் தாழ்வாரங்கள் போல் நீங்கள் திருநெல்வேலி குறித்து எழுதவேண்டுமென்று கேட்டுகொண்டேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். மொத்தமாக எழுதவில்லை என்றார்.

விக்கி அண்ணாச்சியுடன்

முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் அமர்வு நான் பெரிதும் எதிர்பார்த்து அமர்ந்திருந்த ஒன்று. இந்திரா காந்தி – சுற்றுச்சூழல் தொடர்பாக புத்தகம் எழுதிய ஜெய்ராம் ரமேஷ், ஆங்கில இந்துவில் பத்தி/கட்டுரை எழுதும் ஜெய்ராம் ரமேஷ், பாராளுமன்ற குழு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் என்று அனைத்து வகையிலும் அவரை வாசித்திருக்கிறேன். அந்த அமர்வை நெறிப்படுத்தியது மேகாலயா மாநிலத்தில் பணியாற்றும் ராம்குமார் ஐ.ஏ.எஸ். இவருடைய ‘அகதி’ என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி ஏற்கெனவே நண்பர் ஒருவர் என்னிடம் சொல்லி இருந்தார். இவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது எனக்கு புதிய செய்தி. அந்த வகையில் அமர்வில் இருந்த இருவருமே எனக்கு முக்கியமானவர்கள். ‘ஆசிய ஜோதி’ புத்தகத்தை நான் வாசித்திருக்கவில்லை. கேள்வியுற்றிருக்கிறேன். தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அதன் ஒரு பகுதி பாடமாக இருக்கிறது! ஜெய்ராம் ரமேஷ் பேச பேச வேக வேகமாக குறிப்புகள் எடுத்துகொண்டு அவர் பேசியதன் சாரம் மாறாமல் கூடுமானவரை அப்படியே மொழிபெயர்த்தார் ராம்குமார். இந்த இரண்டு நாள் அமர்வுகளில் கேள்வி கேட்கலாம் என்று எண்ணிய ஒரே அமர்வு இது தான்.  மனதளவில் தயாராகி ஒரு மாதிரி உருண்டு திரண்டு எழுவதற்குள் நேரம் முடிந்துவிட்டது. வரும் ஆண்டுகளில் இந்தத் தயக்கம் உடைபடும் என்று நம்புகிறேன். நான் கேட்க நினைத்த கேள்வியைத் தொட்டே அமைந்திருந்தது இரம்யாவின் கேள்வி. ஆனால் அவரும் கூர்மையாக அடிக்காமல் எங்கோ தொட்டு எங்கோ சென்று கேள்வியை முடித்துவிட்டார். அதுக்குறித்து இரம்யாவிடம் இரண்டொரு நிமிடங்கள் பேசிவிட்டு, தனது வாலெட்டைத் தொலைத்துவிட்ட பதற்றத்தைக் கொஞ்சம் கூட வெளிக்காட்டாமல் முதல் நாள் அமர்வில் பேசிய கோகுல் பிரசாத்தைப் பாராட்டி பேசி வாழ்த்துச் சொன்னேன்.

இதற்கிடையில் அண்ணன் அகரமுதல்வன் வந்து சேர்ந்திருந்தார். எப்போது அவர் வந்தாலும் பேசினாலும் பரபரப்புக்கும் பகடிக்கும் பஞ்சமிருக்காது. நேரம் ஓடியது. இடை இடையே நண்பர்கள் சிவ மணியன், அண்ணன் காரைக்குடி நாராயணன், குறள் பிரபாகரன், நவீன்குமார் ஆகியோரிடமும் பேச முடிந்தது. முதல் நாள் முழுதும் நான் தேடிக்கொண்டிருந்த அண்ணன் செல்வேந்திரன் இன்றுதான் வந்திருந்தார். வேட்டியில் தோரணையாக இருந்தார். அருகிலிருந்த அகரமுதல்வன் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அறிமுகப்படுத்துகையில் இவர்தான் ‘குருதிப்பலி’ செந்தில் என்றதும் தான் நன்றாக கவனித்தேன், வீடியோவில் அம்பியாக தெரிந்தவர் தற்போது அந்நியனுக்கும் ரெமோவுக்குமான இடைப்பட்ட தோற்றத்தில் சுருள் முடி காதில் கடுக்கன் சகிதமாக இருந்தார்.

முதல் நாள் தமிழினி அரங்கில் அம்மன் நெசவு புத்தகத்தைப் பார்த்தேன். அண்ணன் ராயகிரி சங்கர் ஒருமுறை பேசும்போது இதைப் பரிந்துரைத்திருந்தார்; சரி போகும்போது வாங்கலாம் என்று விட்டுவைத்திருந்ததில் மறந்தே போனது. மறுநாள் வந்த அகரமுதல்வனும் அதையே சொல்ல, உடனே ஓடிச் சென்றேன். அதற்குள் புத்தகம் முடிந்துவிட்டது. சரி வேறெதாவது வாங்கலாம் என்று யோசனையுடன் நின்றேன். எதிரிலிருந்து ஒரு குரல், “என்ன எப்படி இருக்கீங்க?”. எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் நின்றிருந்தார். நமக்கு பின்னால் யாரோ நிற்கிறார்கள் போல என்று திரும்பிப் பார்த்தேன். “ஹலோ, உங்களைத்தான்.” உண்மையில் அதை நான் எதிர்பார்க்கவில்லை. இதுவரை அவரது படைப்புகள் எதையும் வாசித்ததுமில்லை. அவரிடம் பேசியதுமில்லை. ஆனால் அவர் மிகச்சரியாக என்னை அடையாளம் கண்டுகொண்டு பேசியதும் கொஞ்சம் நடுங்கித்தான் போனேன்.

“சார், உங்களுக்கு அடையாளம் தெரியுதோ என்னமோன்னு தான் சார் நானா பேசல”

“ஏன் தெரியாது? பிகு. திருநெல்வேலி. தீதிலர்-ன்னு ஒரு குறுநாவல் எழுதி இருக்கீங்க. நேத்து பிஞ்ச் ஆப்-ல ஒரு கதை வந்திருக்கு சரியா?”

ஆஹா… பேஸ்புக்!

இனிமேல் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். அவருடைய வால்வெள்ளி குறுநாவல் தொகுப்பில் கையெழுத்து பெற்றுகொண்டு இரண்டொரு வார்த்தைகள் பேசி விடைபெற்றேன்.

விழாவின் உச்ச நிகழ்வான விருது வழங்கும் நிகழ்வு தொடங்குவதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமானது. ஒரு தேநீருக்காக ஜீவா அண்ணனுடன் கீழிறங்க வாசலில் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்கவியலா ஆளுமை அண்ணன் ஸ்ருதி டீ.வி கபிலன் தன் சகா சுரேஷ் அண்ணனுடன் நுழைந்திருந்தார். அது என்னவோ தெரியவில்லை, எந்த இலக்கிய நிகழ்வென்றாலும் கபிலன் நுழைந்ததும் தான் அது தன் முழுமையான அரிதாரத்தைப் பூசிக்கொள்கிறது. அண்ணன்களுடன் டீ முடித்து வரவும் நிகழ்வும் ஆரம்பமானது.

நாஞ்சில் நாடனுடன்

கவிஞர் ஆனந்த்குமார் எடுத்த குறும்படம். ஒரே வார்த்தையில் சொல்வதானால், அட்டகாசம்! எவ்வித வெளிப்பூச்சுக்களும் இல்லாமல் படம் முழுவதும் விக்கி அண்ணாச்சி அவராகவே இருந்தார். ஒட்டுமொத்த அரங்கின் கைத்தட்டல்களையும் ஒருசேர பெற்றவர் பகவதி அம்மாள் தான். இந்நிகழ்வுக்கு பின் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. அரங்கிலேயே ஒரு கூட்டம் அவரைச் சுற்றி அமர்ந்து பேச ஆரம்பித்திருந்தது. செதுக்கினாற்போல் நிகழ்ந்த இரு நாள் நிகழ்வும் சரியாக ஞாயிறு இரவு 8.55 மணிக்கு முடிவடைந்தது. அன்றிரவு உணவுக்கும் குறைவில்லை. அற்புதமான சுவை. அதன்பிறகு நடந்தவை எல்லாமும் கல்யாணம் முடிந்து மணமக்களை அனுப்பிவிட்டு வீட்டு மக்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போல் தான். அரங்கின் வாசல் கொள்ளா வாசகர்களுடனும்  நண்பர்களுடனும் குதூகல மனத்துடன் பேசிக்கொண்டிருந்தார் ஜெ; சற்று தள்ளி நான், அகரமுதல்வன், செந்தில் ஜெகன்னாதன், அஜிதன், ஸ்ரீராம் ஆகியோர் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.

நிகழ்வு முடிந்தவுடனேயே நான் கிளம்பி இருக்கவேண்டியது; ரயில் டிக்கெட் எல்லாம் முன்பதிவு செய்து தான் வந்திருந்தேன். மறுநாள் ஈஷா, பேரூர் கோயில்களுக்கு போகலாம் என்று ஆசைக்காட்டி தங்க வைத்துவிட்டார் அகரமுதல்வன். நானும் ஆதியோகி வந்தபின் அங்கு செல்லவில்லை என்பதால் தங்கிவிட்டேன். நண்பர் குமார் சண்முகத்தின் உதவியுடன் ஈஷா சென்று வந்தோம். உடன் செந்தில் ஜெகன்னாதன், நவீன்குமார், ஸ்ரீராம், ஜீவ கரிகாலன். மதிய உணவுக்கு பிறகு அகரமுதல்வன், ஜீவா, செந்தில் சென்னை கிளம்ப இரவு நானும் திருநெல்வேலிக்கு வண்டியேறினேன். எத்தனை எத்தனை முகங்கள்! எவ்வளவு வாசகர்கள்!  உரையாடல்கள்! அனுபவங்கள்! அப்படியே நிறைத்துக்கொண்டேன். தளும்பிக்கொண்டே இருக்கிறேன். அடுத்த டிசம்பர் விரைந்து வருக!

ஜெ.

இரண்டு நாள் நிகழ்வு மொத்தத்திலும் நானாக நின்று புகைப்படம் எடுத்துகொண்டது இரண்டு பேருடன் மட்டுமே. இன்னொன்று அதுவாக வந்தடைந்தது. நாஞ்சில் நாடன், விக்கிரமாதித்தன் நம்பி, ஜெ.

One thought on “விஷ்ணுபுரம் இலக்கிய விழா – சில வார்த்தைகள் – பகுதி 2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s